பனவடலிசத்திரம்:
மானூர் தாலுகா நரிக்குடியை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவர் கேரளாவில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் தங்கதுரைச்சி (வயது 23). இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்த நிலையில் இவர், தனது தாயிடம் கிணற்றுக்குச் சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தாயார், தனது மகளை தேடிச் சென்றார். அப்போது கிணற்றின் அருகே அவரது உடைகள் மற்றும் காலனி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த தாயார், அக்கம்பக்கத்தினரை அழைத்து கிணற்றில் பார்த்தபோது, கிணற்றுக்குள் தங்கதுரைச்சி உடல் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தங்கதுரைச்சி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.