சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

கீழ்வேளூர் அருகே உள்ள கிராமங்களில் சாராயம் விற்பவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலிவலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-04-22 17:14 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே உள்ள கிராமங்களில் சாராயம் விற்பவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலிவலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சாராயம் விற்பனை
நாகை மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, இறையான்குடி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில மாதங்களாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, சிங்கமங்கலம் கிராமத்திலும் சாராயம் விற்கப்படுகிறது.
இதனை தடுத்து நிறுத்துவதோடு சாராயம் விற்பவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலிவலம் போலீசாருக்கு பலமுறை தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
போலீஸ் நிலையம் முற்றுகை
 இதனால், விரக்தி அடைந்த இறையான்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி வலிவலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் வலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தரப்பில், எங்கள் பகுதியில் சிலர் சாராயத்தை தொடர்ந்து விற்கிறார்கள். இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆகவே, சாராயம் விற்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்