டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-04-21 18:56 GMT
வீரபாண்டி
திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் உள்ள தீரன் சின்னமலை நகரில் நேற்று முன்தினம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூராகவும், வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலும் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
எனவே அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் கடை முன்பு அப்பகுதி பொதுமக்கள் முத்தணம்பாளையம் பிரதான சாலையில் நேற்று காலை திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 
இதன் பின்னர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சிவக்கொழுந்து ,  துணை போலீஸ் கமிஷனர் ரவி மற்றும் பலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் முத்தணம்பாளையம் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

மேலும் செய்திகள்