தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் எந்திரங்கள் சீராக முழுமையாக இயங்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் எந்திரங்கள் சீராக முழுமையாக இயங்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அனல் மின்நிலையம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்த அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவு கிடைக்காததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சுமார் 70 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனை கொண்டு மின்சாரம் அதிக அளவில் தேவைப்படும்போது மட்டும் மின்உற்பத்தி எந்திரங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், மற்ற நேரங்களில் எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
மின்உற்பத்தி பாதிப்பு
அதன்படி நேற்று காலையில் 3 மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நேரத்தில் சூரிய மின்உற்பத்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஓரளவுக்கு கைகொடுத்தது. மாலை நேரத்தில் மின்சார தேவை அதிகரித்தது. இதனால் அனல் மின்நிலையத்தில் முழுவீச்சில் மின்உற்பத்தியை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மாலை 6 மணி அளவில் அனல் மின்நிலையத்தில் உள்ள 2-வது மின்உற்பத்தி எந்திரத்தை தவிர மற்ற 4 எந்திரங்களும் இயக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 829 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
மின்உற்பத்தி எந்திரங்களை சீராக முழுமையாக இயக்காததால் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. அடிக்கடி எந்திரங்களை நிறுத்தி, மீண்டும் இயக்குவதால் எந்திரங்கள் விரைவில் பழுதடைய வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடும் மின்வெட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கடுமையான மின்வெட்டு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மின்வெட்டு குறித்து அதிகாரிகளும் சரிவர பதில் அளிக்காததால் மக்கள் செய்வது அறியாமல் திகைத்தனர். கோடை வெப்பம் காரணமாக புழுக்கமாக இருந்ததாலும், மின்தடை காரணமாகவும் அவர்கள் கடும் அவதிப்பட்டனர்.