குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் தர்ணா
பட்டா வழங்காமல் அலைக்கழித்ததால் குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் 5 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
தர்ணா போராட்டம்
தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுகூர் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 5 பேர் குளித்தலை தாசில்தார் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- வடிவேல் என்பவரின் தந்தை பெயரில் உள்ள புன்செய் நில தனி பட்டாவில் எந்த ஆவணமும் இன்றி 3 பேர் கூட்டு சேர்க்கப்பட்டதாகவும் அவர்களது பெயரை நீக்கம் செய்ய 2 ஆண்டுகளாக தாசில்தார் அலுவலர்கள் அலைக்கழித்து வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை
முத்துசாமி மகன் கதிர்வேல் சொந்தமாக கிரையம் பெற்ற புன்செய் நிலத்திற்கு 8 மாதமாக பட்டா வழங்காமலும், லட்சுமி என்பவர் குடியிருக்கும் வீட்டிற்கு நத்தம் வீட்டுமனை பட்டா கடந்த 1½ ஆண்டாக வழங்காமலும், தமிழ்ச்செல்வி என்பவருக்கு கிடைத்த பத்திரப்படி 7¾ சென்ட் வீட்டுமனைக்கு 4 முறை பட்டா வழங்காமல் நிராகரித்த நிலையில், 7 சென்டுக்கு மட்டும் 3 பேருடன் கூட்டு பட்டா வழங்கியது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் வருவாய்த்துறை அலுவலர்கள் எங்களை அலைக்கழித்து வருகிறார்கள். இதனை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும், தாசில்தார் நேரில் வந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வரை தாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து அங்கேயே அமர்ந்து இருந்தனர். இதன் பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதிகாரிகள் விசாரணை
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாசில்தார் விஜயா அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மனுக்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.