வருமானம் இல்லாததால் விரக்தி கடிதம் எழுதி வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை
அடையாறில் வருமானம் இல்லாத விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). இவருக்கு திருமணமாகி லட்சுமி (37) என்ற மனைவியும், 12 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். ரமேஷ், இஸ்திரி தொழில் செய்து வந்தார். அந்த தொழிலில் போதுமான வருமானம் கிடைக்காததாலும், 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காததாலும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மகளை சிலம்பம் வகுப்பில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்த ரமேஷ், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய மகன், தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அடையாறு போலீசார், ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டபோது, ரமேஷ் கைப்பட எழுதிய கடிதம், மகளின் பள்ளி நோட்டு புத்தகத்தில் இருந்ததை கண்டெடுத்தனர். அதில் அவர், ‘‘என் சாவுக்கு காரணம் என் இயலாமையே’’ என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.