பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு தாலுகா மதுரை பெரும்பட்டூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவிலுக்கு முன்பு பெரிய பந்தல் அமைத்து 108 கலசத்தில் புனிதநீர் நிரப்பி தம்பதி பூஜை, விஷ்ணு பூஜை, விநாயகர் பூஜை, மூன்று கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் கோபுரத்தின் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்தனர். உற்சவருக்கு சீதாதேவி ராமச்சந்திர பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக பக்தர்கள் சார்பில் பட்டு சேலை, வேட்டி, தேங்காய் பழவகைகள், மாங்கல்யம் ஆகியவை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, போளூர், தேவிகாபுரம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 6 மணி அளவில் சீதாதேவி, ராமச்சந்திர பெருமாள் பிரசன்ன ஆஞ்சநேயர் ஆகிய உற்சவ சாமிகள் வீதி உலா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் மதுரை பெரும்பட்டூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.