சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப் கார் சோதனை ஓட்டம் அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.
சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.
ரோப்கார் சோதனை ஓட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் 750 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன மலையில் அமைந்துள்ளது. பக்தர்கள் 1,305 படிக்கட்டுகள் நடந்து சென்று நரசிம்மரை தரிசனம் செய்ய வேண்டும். கார்த்திகை மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நரசிம்மரை தரிசனம் செய்வது வழக்கம். மலை உச்சியில் இருக்கும் நரசிம்மரை தரிசனம் செய்ய ரோப்கார் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தபணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று ரோப்கார் சோதனை ஓட்டம் நடந்தது.
அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அவர்கள் ரோப் காரில் சென்று நரசிம்மரை தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம் செய்த பின்பு அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் வருகிறார்
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த ரோப்கார் பணிகளை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. அடிப்படை வசதிகள் இன்னும் 4 மாதத்தில் நிறைவடைந்துவிடும். அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சோளிங்கர் பகுதிக்கு நேரடியாக வந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பார் என்றார்.
நிகழ்ச்சியில் ரோப்கார் கமிட்டி குழு உறுப்பினர் தொழிலதிபர் பெங்களூரு போபால் மற்றும் ரவிச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் ஜெயா, நகராட்சி ஆணையர் பரந்தாமன், சோளிங்கர் நகராட்சி தலைவர் தமிழ்செல்வி அசோகன், துணைத் தலைவர் பழனி, ஒன்றியக் குழு தலைவர் கலைகுமார், துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நாகராஜன், நகராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.