பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலம்

விவசாயம் செழித்து, பருவமழை பெய்யவேண்டி பெண்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-04-13 17:10 GMT
முதுகுளத்தூர், 
விவசாயம் செழித்து, பருவமழை பெய்யவேண்டி பெண்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொங்கல் விழா
முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில் உள்ள வாழவந்த அம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி அந்த பகுதி பெண்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். தினந்தோறும் இரவில் அம்மனுக்கு தீபாராதனை அபிஷேகம் நடைபெற்று வந்தது.
விளங்குளத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழ்நிலையில் அனைவரும் விவசாயத்தை அடிப்படையாக தொழிலாக கொண்டுள்ளனர். விவசாயம் செழிக்கவும், பருவ மழை பெய்ய வேண்டியும், உடல் நலம் பெற வேண்டியும் ஆண்கள் மற்றும் பெண்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஆண்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 
பால்குடம்
சுப்பிரமணியபுரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வாழவந்த  அம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் பக்தி பரவசத்துடன் அக்னி சட்டியைக் கையில் ஏந்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். 
இதில் விளங்குளத்தூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கிராம பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்