கொடைக்கானலில் போலீஸ் குடியிருப்பு கட்டிடம் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கொடைக்கானலில் கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்பு கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
கொடைக்கானல்:
கொடைக்கானல் லாஸ்காட் சாலையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் புதிதாக போலீஸ் துணை சூப்பிரண்டு முகாம் அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை சென்னையில் இருந்தவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனையடுத்து கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா, நீதிபதிகள் தினேஷ்குமார், கார்த்திக், ஆர்.டி.ஓ. மோகன், நகரசபை தலைவர் செல்லத்துரை, ஆணையாளர் நாராயணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அலுவலக பணியை தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் நகரசபை தலைவர்கள் குரியன் ஆபிரகாம், முகமது இப்ராகிம், துணைதலைவர் மாயக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்டின் தினகரன், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் நன்றி கூறினார்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்கி விட்டதாலும், தொடர் வார விடுமுறை வர உள்ளதாலும் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) முதல் கூடுதல் போலீசார் பணியில் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக 6 மோட்டார்சைக்கிள்களில் 12 போலீசார் போக்குவரத்தை சீரமைப்பதில் ஈடுபடுவார்கள். நகரின் முக்கிய இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் அமைக்கப்படும். ஏரியை சுற்றி கனரக வாகனங்கள் செல்வதை தடுப்பதற்காக இரும்பு தடுப்புகள் உடனடியாக அமைக்கப்படும். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை ஒரே பகுதியில் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.