ஆஜர்படுத்த வந்த போது கோர்ட்டில் இருந்து கைதி தப்பி ஓட்டம் குழித்துறையில் பரபரப்பு

மார்த்தாண்டம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது கைதி தப்பியோடி விட்டார்.;

Update: 2022-04-11 18:19 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது கைதி தப்பியோடி விட்டார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொலை வழக்கு கைதி
மார்த்தாண்டம் பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில், கேரள மாநிலம் பாறசாலை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இஞ்சிவிளையை அடுத்த நெடுவிளை பகுதியை சேர்ந்த பாபு என்ற சாக்கன்பாபு (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு பாபு ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே பாறசாலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் பாபுவை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர்.
தப்பிஓட்டம்
இந்தநிலையில் மார்த்தாண்டத்தில் நடந்த திருட்டு வழக்கில், பாபுவை கேரள போலீசார் குழித்துறைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிறார்கள். அதே போல்  பாபுவை குழித்துறை கோர்ட்டுக்கு கேரள போலீசார் அழைத்து வந்தனர்.
மதியம் 1 மணி அளவில் சார்பு நீதிமன்றத்தின் உள்ளே பாபு செல்வதற்காக கைவிலங்கை போலீசார் கழற்றினார்கள். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாபு திடீரென்று அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசாரும், பொதுமக்களும் அவரை பிடிக்க துரத்தி சென்றனர். அதற்குள் பாபு மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டார்.
பரபரப்பு
இதுபற்றி மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் பாபுவை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி கேரள எல்லையோர பகுதி போலீஸ் நிலையங்கள் மற்றும் திருவனந்தபுரம் கமிஷனர் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்