பஞ்சப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பஞ்சப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-04-11 17:54 GMT
பாலக்கோடு:
பஞ்சப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே நமாண்டஅள்ளி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 6 மாதமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் பஞ்சப்பள்ளி- ராயக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் மற்றும் பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
போக்குவரத்து பாதிப்பு
அப்போது குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரி மற்றும் போலீசாருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
அப்போது சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக பஞ்சப்பள்ளி-ராயக்கோட்டை சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்