தர்மபுரியில் மாநில கைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் ஈரோடு கொங்கு அணி முதலிடம் பெண்கள் பிரிவில் சேலம் அணி வெற்றி

தர்மபுரியில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈரோடு கொங்கு அணி முதலிடமும், பெண்கள் பிரிவில் சேலம் அணி முதலிடமும் பிடித்தது.

Update: 2022-04-11 17:54 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈரோடு கொங்கு அணி முதலிடமும், பெண்கள் பிரிவில் சேலம் அணி முதலிடமும் பிடித்தது.
மாநில கைப்பந்து போட்டி
தர்மபுரி பாய்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் மின்னொளியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் கிருஷ்ணகிரி, வேலூர், மதுரை, தேனி, தர்மபுரி, சென்னை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த அணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு  விளையாடினர். 
இறுதி போட்டி தொடக்க விழாவுக்கு மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி.என்.வி.செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் செயலாளர்கள் விஷ்ணுசந்தர், ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டிகளை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈரோடு கொங்கு அணி முதலிடமும், சென்னை சத்யபாமா அணி 2-ம் இடமும், தர்மபுரி அணி 3-ம் இடமும்,  பிடித்தன. 
பரிசு 
இதேபோன்று பெண்கள் பிரிவில் சேலம் அணி முதலிடமும், தேனி அணி 2-ம் இடமும், ஓசூர் ஈகிள் ஸ்போர்ட்ஸ் அணி 3-ம் இடமும் பிடித்தன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டன. அதனை முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், தி.மு.க. நகர பொறுப்பாளர் அன்பழகன், நிர்வாகி தடங்கம் இளையசங்கர், இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சுதா ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் கவுதமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வழங்கினர். 
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் பாண்டியன், சின்னப்பாப்பா மாதேஷ், நிர்வாகிகள் காசிநாதன், சசிகுமார், கந்தன், ஜீவா, வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்