தளி அருகே தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தளி அருகே தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர் பிணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி டாஸ்மாக் கடை பின்புறம் நேற்று காலை தலையில் பலத்த காயத்துடன் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அடித்துக்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அடித்துக்கொலை செய்யப்பட்டவர் தளி அருகே உள்ள தேவகானப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) என்பதும், இவர் உழிவீரணப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பேட்டரி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும், இதுகுறித்து அவருடைய பெற்றோர் தளி போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது.
வலைவீச்சு
மேலும், சம்பவம் நடந்த இடத்தில் பாறையில் ரத்தக்கறை படிந்திருந்தது. பீர் பாட்டில்களும் கிடந்தன. இதனால் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தளி அருகே தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.