ஒகேனக்கல்லுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி லாரி கிளீனர் சாவு

ஒகேனக்கல்லுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி லாரி கிளீனர் இறந்தார்.

Update: 2022-04-11 17:54 GMT
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி லாரி கிளீனர் இறந்தார்.
நண்பர்களுடன் சுற்றுலா 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் கமல்நாத் (வயது 21). லாரி கிளீனர். இவர் தனது நண்பர்கள் 50 பேருடன் பஸ்சில் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார். நண்பர்கள் அனைவரும் குளிக்க சென்றனர். ஆனால் கமல்நாத் மட்டும் குளிக்காமல் பஸ்சிலே இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து அவர் மட்டும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது கமல்நாத் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வராததால் நண்பர்கள் பல்வேறு இடங்களில் கமல்நாத்தை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நண்பர்கள் ஒகேனக்கல் போலீசில் புகார் செய்தனர்.
பிணமாக மீட்பு
அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கமல்நாத்தை தேடினர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தீயணைப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கமல்நாத் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை ஓம்சக்தி கோவில் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்