திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திணடிவனம் நகர மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் வரவேற்றார்.
கூட்டம் தொடங்கியவுடன், கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியின் கோரிக்கைகள் குறித்து பேச தொடங்கினர். அப்போது, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், சரவணன், கார்த்திக், திருமகள் ஆகிய 4 பேரும், பா.ம.க. கவுன்சிலர் ஹேமமாலினியும் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினர். தொடர்ந்து, வெளியே வந்த அவர்கள் சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
நெருக்கடி
வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று தாக்கத்தில் இருந்து தற்போது தான் பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் இந்த புதிய வரிசுமை பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் இதை திரும்ப பெற வேண்டும் என்றனர்.
இதை தொடர்ந்து, நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில், கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்து பேசினர். மேலும் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.