கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்
கட்டிட அனுமதி வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தேனி:
தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் கடந்த 31-ந்தேதி திடீர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது, ஊராட்சி பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக தெரியவந்தது. மேலும், பதிவேடுகள் முறையாக பராமரிக்காமலும், ஊராட்சி வரவுகளை முறையாக செலுத்தாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஊராட்சி செயலாளர் ரகுநாத் மீது துறைவாரி நடவடிக்கையாக அவரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். பொதுநலன் மற்றும் ஊராட்சி நிர்வாக நலன் கருதியும், கடும் முறைகேடுகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் காரணமாகவும் ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.