அரசு ஆஸ்பத்திரிக்கு வயிற்று வலி என சென்றவருக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வயிற்று வலி என சென்றவருக்கு தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கையால் எய்ட்ஸ் நோய் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-04-11 17:43 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம்  அரசு ஆஸ்பத்திரிக்கு வயிற்று வலி என சென்றவருக்கு தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கையால் எய்ட்ஸ் நோய் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வயிற்று வலி
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 52 வயது விவசாயிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த பிப்ரவரி 23-ந் தேதி வந்துள்ளார். அவரை அனுமதித்து ரத்த பரிசோதனை உள்ளிட்டவைகள் எடுத்து சிகிச்சை அளித்துள்ளனர். 
பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்று உள்ளதாக கூறி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு 26-ந் தேதி அனுப்பி வைத்துள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் எய்ட்ஸ் தொற்று அறிக்கையை வைத்து அவருக்கு பல நாட்கள் சிகிச்சை அளித்துள்ளனர். எய்ட்ஸ் நோய்க்கான மருந்து, மாத்திரைகள் வழங்கி அதற்குரிய வழிமுறைகளின்படி தனித்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. 
மீண்டும் வலி
ஆனாலும் அவருக்கு குணமடையாததால் எய்ட்ஸ் நோய் காரணமாகவும் வலி இருக்கலாம் அதற்கான மருந்தை முறையாக சாப்பிட்டு அது சரியானால் வலியும் குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது என கூறி அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டனர். வீட்டிற்கு வந்த முதியவருக்கு மீண்டும் வயிற்று வலி அதிகரித்துள்ளது. 
இதை தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்துள்ளனர். அங்கு அவருக்கு எய்ட்ஸ் தொற்று இல்லை என்று தெரிவித்து பித்தப்பை கல் உள்ளதாக கூறி அதற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன்பின்னர் உடல்நிலை சரியாகி முதியவர் வீட்டிற்கு வந்துள்ளார். எய்ட்ஸ் உள்ளதாக கூறியதால் கடந்த 2 மாதங்களாக மனவேதனைக்குள்ளான முதியவர் சொல்ல முடியாத அவதி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து மீண்டும் எய்ட்ஸ் பரிசோதனை செய்துள்ளார். அப்போது பரிசோதனை முடிவில் எய்ட்ஸ் இல்லை என்று வந்துள்ளது. 
மன்னிப்பு
அங்கு பரிசோதனை செய்தவர்களிடம் 2 மாதங்களுக்கு முன்னர் தனக்கு எய்ட்ஸ் என்று அறிக்கை அளித்தீர்கள். இப்போது இல்லை என்கிறீர்கள். 2 மாதத்தில் குணமடைந்து விட்டதா? என்று கேட்டு 2 மாத காலமாக நான் பட்ட வேதனை என்னவென்று தெரியுமா என்று கண்ணீர் மல்க கேட்டுள்ளார். 
இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு, இதனை வெளியில் சொல்ல வேண்டாம் கூறியுள்ளனர். இதனால் அவர் அங்கிருந்து வேதனையுடன் சென்று விட்டார்.
தவறான அறிக்கை
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் விவசாயிக்கு எய்ட்ஸ் என்று தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கை அளித்து சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இதுகுறித்து கல்லூரி டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர் டாக்டர் மலர்வண்ணன் ஆகியோரிடம் கேட்டபோது, இதுகுறித்து எங்களின் கவனத்திற்கு வரவில்லை. அவ்வாறு நடந்து இருந்தால் கண்டிப்பாக தவறுதான். இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்தனர்.
எய்ட்ஸ் நோய் என்று பரிசோதனை அறிக்கை அளித்து 2 மாத காலமாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த கொடுமை வேதனை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்