நீர்நிலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேறுஇடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
நீர்நிலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேறுஇடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் இருளர், நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். நீர்நிலைப்பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தால் அதனை இடித்து அகற்ற வேண்டும். நீர்நிலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கக்கோரி ஒவ்வொரு தாலுகாவிலும் 50-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் பெயர், முகவரி, ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, தகுதியான நபர்களுக்கு வீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதில், உதவி கலெக்டர்கள் பூங்கொடி (வேலூர்), தனஞ்செயன் (குடியாத்தம்) மற்றும் தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.