சொத்து வரி உயர்வு தீர்மானத்தை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி நகரசபை கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தீர்மானத்தை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி நகரசபை கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தீர்மானத்தை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகரசபை கூட்டம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று மாலை அவசர மற்றும் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகரசபை தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வரவேற்றார்.
கூட்டத்தில் 38 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் அ.தி.மு.க.வை சார்ந்த 6 கவுன்சிலர்களில் 4 பேர் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
இதில். சொத்துவரி உயர்வு காரணிகள் குறித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 16 இடங்களில் உள்ள இலவச கழிவறைகள் பொதுமக்கள் நன்கு சுகாதாரத்துடன் பயன்படுத்தும் வகையில் கட்டண கழிவறைகளாக மாற்றம் செய்வது, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையங்களில் குடிநீர் வினியோகம், மின்விளக்கு வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது, குடிநீர் வசதிக்காக குழாய்கள், ஆழ்துளைகள் அமைப்பது, சாலை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
ெவளிநடப்பு
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர் பழனி பேசுகையில், தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியாக சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று தெரிவித்தனர். தற்போது சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
எனவே சொத்து வரி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து மற்ற வார்டு உறுப்பினர்கள் ஒப்புதலின் பேரில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
ஆரணி நகரசபையின் அவசரக்கூட்டம் நகரசபை தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடந்தது. நகரசபை துணைத்தலைவர் பாரி பி.பாபு முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார்.
கூட்டத்தில் ஆரணி நகரில் 600 சதுர அடிக்கு கீழ் உள்ள வீடுகளுக்கு 50 சதவீதமும், 1200 சதுர அடிக்கு கீழ் உள்ள வீடுகளுக்கு 75 சதவீதமும், 1200 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதமும் சொத்துவரி உயர்த்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை கருத்துரு செய்ய வேண்டி நடந்த அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனப் படிக்கப்பட்டது.
வெளிநடப்பு
நகரசபை துணைத்தலைவர் பாரி பி.பாபு தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து கூட்டத்துக்கு வந்திருந்தனர். அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசை கண்டித்துக் கோஷம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியே சென்றதும் தீர்மானத்தைப் படித்து நிறைவேற்றப்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க., கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ் நன்றி கூறினார்.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நகரசபை கூட்டம் நடந்தது. தலைவர் எச்.ஜலால் தலைமை தாங்கினார். ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் க.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அம்பிகா மேகநாதன், பிரியா ஆறுமுகம், பா.ம.க. உறுப்பினர்கள் ரதிகாந்தி வரதன், ராமஜெயம், சுயேச்சை உறுப்பினர்கள் வெ.ரவிச்சந்திரன், பீபீஜான் ஆகியோர் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பேசினர்.
பின்னர் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து 6 கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பெரணமல்லூர் பேரூராட்சி
பெரணமல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். செயல்அலுவலர் தமிழரசி வரவேற்றார்.
கவுன்சிலர்கள் ஜமுனாபெருமாள், சுமித்ரா சீனிவாசன், யசோதா மூர்த்தி, சிவகாமி மனோகரன், மோனிஷா மதன்ராஜ், பூங்காவனம், பானு பாண்டு, லோகேஸ்வரி துளசி, பணி நியமன குழு உறுப்பினர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு சொத்து வரி சம்பந்தமாக விவாதித்தனர்.
அப்போது சொத்து வரியை உயர்த்த கூடாது என்று கோஷமிட்டு அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் யசோதா மூர்த்தி, சுமித்ரா சீனிவாசன், யோகேஸ்வரிதுளசி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் வெளியில் கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி, நகர பொறுப்பாளர் ஜவஹர் சேகர் மற்றும் அ.தி.மு.க.வினர் சொத்து வரியை உயர்த்த கூடாது என்று கோஷமிட்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கவுதம் முத்து சொத்து வரியை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை பேரூராட்சி மன்ற தலைவரிடம் அளித்தார். பின்னர் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.