தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
கோவை சுங்கம் காந்திநகரை சேர்ந்தவர் அலோசியஸ் பிரான்சிஸ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர் அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தனது நண்பர் சந்திரன் என்பவருடன் சென்றார்.
அங்கு சந்திரன் நடனமாடியபோது, அவருக்கும் மற்றொரு வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அலோசியஸ் இருவரையும் சமாதானம் செய்து சந்திரனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் காந்திநகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோவிலில் பிரச்சினை செய்த வாலிபர் வழிமறித்து அலோசியஸ் பிரான்சிடம் மீண்டும் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி அலோசியஸ் பிரான்சை தாக்கினார்.
இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் தப்பி சென்று விட்டார். காயமடைந்த அலோசியஸ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், அலோசியஸ் பிரான்சிசை தாக்கியது புலியகுளம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த பரத் (22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.