பள்ளிகொண்டா அருகே செம்மரம் வெட்ட சென்றவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட்டம்

பள்ளிகொண்டா அருகே செம்மரம் வெட்டுவதற்காக சென்றவர்கள் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2022-04-11 17:24 GMT
அணைக்கட்டு

பள்ளிகொண்டா அருகே செம்மரம் வெட்டுவதற்காக சென்றவர்கள் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓட்டம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் காரை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றனர்.

இதனால் போலீசார் பின்தொடர்ந்து விரட்டி சென்று பள்ளிகொண்டா அடுத்து சின்னசேரி மேம்பாலத்தின் அருகே காரை மடக்கி நிறுத்தினர். காரிலிருந்து போலீசார் இறங்குவதற்குள் காரில் இருந்த 6-க்கும் மேற்பட்ட நபர்கள் காரை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
 
செம்மரம் கட்டதுவதற்கு

இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தப்பி ஓடியநபர்கள் சுற்றுப்புற பகுதிகளில் பதுங்கி இருக்கிறார்களா என தேடினர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் விட்டுச்சென்ற காரை சோதனை செய்தனர். காரில் சமையலுக்கு தேவையான அரிசி, மிளகாய் தூள், தக்காளி உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். காரில் சென்றவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்