ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் துணிகர கொள்ளை

குலசேகரம் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-04-11 17:23 GMT
குலசேகரம்:
குலசேகரம் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மளிகை கடை
குலசேகரம் அருகே உள்ள கோட்டூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 55). இவர் தும்பகோடு பாலம் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு சென்றார். 
நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த ேபாது பொருட்கள் சிதறி கிடந்தன. மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.23 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையில் இருந்த தேயிலை உள்ளிட்ட மளிகை பொருட்களும் கொள்ளை போயிருந்தது. 
நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து உள்ளனர்.
அடுத்தடுத்து கைவரிசை
மளிகை கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் அதன் அருகே உள்ள பரமேஸ்வரன் என்பவரது டீ கடையை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்து ரூ.3,500 பணம் மற்றும் 2 பாட்டில் தேன், சிகரெட், வாழைத்தார் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
அத்துடன் அருகில் உள்ள ஒரு காய்கறி கடை மற்றும் ஒரு ஓட்டல் ஆகியவற்றின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பணம் எதுவும் இல்லாததால்  கொள்ளையர்கள் கையில் எதுவும் சிக்கவில்லை. 
இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடைகளில் பதிவாகி இருந்த தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. 
கண்காணிப்பு கேமரா
இந்த துணிகர கொள்ளை குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே பகுதியில் 4 கடைகளை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் தும்பகோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்