சொத்து வரி உயர்வை கண்டித்து விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை கண்டித்து விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-04-11 17:09 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சக்கரை தமிழ்செல்வி தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் அதிகாரிகள் பலர் முன்னிலை வகித்தனர்.


 கூட்டத்தின் தொடக்கமாக, அரசு அறிவித்த சொத்து வரி உயர்வை விழுப்புரம் நகராட்சியில் அமல்படுத்துவது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், அதை நிறைவேற்றி தருமாறும் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களை தலைவர் சக்கரை தமிழ்செல்வி கேட்டுக்கொண்டார்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அதற்கு அ.தி.மு.க. நகரமன்ற கவுன்சிலர்கள் வக்கீல் ராதிகா செந்தில்,  கோல்டுசேகர், ஜெயப்பிரியா சக்திவேல், கோதண்டராமன், ஆவின் செல்வம், கல்யாணசுந்தரம் ஆகியோர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதை தீர்மானமாக நிறைவேற்றக்கூடாது என்றும், 

சொத்து வரியை உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது, உடனடியாக சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பியவாறு நகரமன்ற கூட்டத்தை புறக்கணித்து விட்டு கூட்டத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தீர்மானம் நிறைவேற்றம்

இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்ற போதுமான நகரமன்ற உறுப்பினர்கள் இருந்ததால் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நகரமன்ற கவுன்சிலர்கள் தங்கள் வார்டு கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

மணவாளன் (தி.மு.க.) :- விழுப்புரம் நகராட்சியில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் வரி ஏற்றப்படவில்லை. 2017-ல் அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரியை உயர்த்த முடிவு செய்தனர். அதற்கான பணிகள் தொடங்கி கணினியிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. அடுத்துவரும் தேர்தலை கருத்தில் கொண்டு அவர்கள் கிடப்பில் போட்டுவிட்டனர். சொத்து வரியை உயர்த்த முதலில் முன்வந்தது அ.தி.மு.க.தான். மேலும் நகரம் முழுவதும் வரி விதிப்புகளை சீராய்வு செய்ய வேண்டும்.

இளந்திரையன் (பா.ம.க.) :- எனது 37-வது வார்டில் புதிய தெருமின் விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். சாலை, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதோடு பன்றிகள் தொல்லையையும் கட்டுப்படுத்த வேண்டும். ராகவன்பேட்டை பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
ரியாஸ் (ம.ம.க.) :- நகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்யாமல் சொத்து வரியை உயர்த்துவது ஏன்? வரியை உயர்த்துவது குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குடிநீர் வசதி

சுரேஷ்ராம் (காங்கிரஸ்) :- பானாம்பட்டு காலனியில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.

வித்தியசங்கரி (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :- எனது வார்டில் உள்ள 2 அங்கன்வாடி மையங்களில் ஒன்று இடியும் நிலையில் உள்ளது. மற்றொன்று நூலக கட்டிடத்தில் இயங்குகிறது. எனவே 2 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் வேண்டும். வழுதரெட்டி காலனி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

இவ்வாறு நகரமன்ற கவுன்சிலர்கள் பேசினார்கள்.

இதை கேட்ட நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி, இக்கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாந்தராஜ், சசிரேகா, பத்மநாபன், புருஷோத்தமன், உஷாராணி, அமர்ஜி, மகிமை கீர்த்தி பிரியா, இம்ரான்கான், அன்சர் அலி உள்பட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்