விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்;

Update: 2022-04-11 17:01 GMT
திருவண்ணாமலை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அரசு நியமனம் செய்துள்ள கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர் செயல்பாடு இல்லாமல் உள்ளதை கண்டித்து இன்று திருவண்ணாமலை  கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். 

அப்போது விவசாயிகள் இருப்புறமாக நின்று கொண்டு ஒரு புறத்தில் உள்ளவர்கள் கால்களை சாக்கு பைகளில் விட்டு கட்டி கொண்டு குதித்தபடி தட்டுதடுமாறி கீழே விழுந்து எழுந்து வந்து எதிர்புறத்தில் உள்ளவர்களை வந்து அடைவது போன்று செய்து காண்பித்தனர்.

 இவ்வாறு தான் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தட்டுதடுமாறி செயல்படுகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

மேலும் அவர்கள் கூறுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு காரணங்கள் காட்டி 10 நாட்களுக்கு பின்னர் தான் நெல் மூட்டைகள் எடை போடப்படுகிறது. இந்த நிலையில் அரசு சிப்பம் ஒன்றுக்கு எடைபோட ரூ.10 வழங்குவதாக அறிவித்துள்ளது. 

எடை பணியாளர்கள் தினகூலி போதவில்லை என்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

இதனால் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டை தேங்குகின்றது. எனவே எடை கூலி பணியாளர்களின் ஆதார், வங்கி கணக்கு எண் பெற்று எடை கூலி ரூ.10-ஐ உடனடியாக வங்கி கணக்கில் வாரத்திற்கு ஒரு முறை வழங்கி கண்காணிப்பு செய்தால் மட்டுமே ஊழல் முறைகேடு தடுக்க முடியும். 

அரசு நியமனம் செய்துள்ள கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர் செயல்பாடு இல்லாமல் உள்ளதை கண்டிக்கிறோம். எனவே அந்த கமிட்டி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.  

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்