தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-11 16:59 GMT

பாலத்தில் உடைப்பு 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுச்சேரி கிராமத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் நடக்கும் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள் இதில் கால் வைத்து கீழே விழுந்து காயம் அடையவும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடையவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேட்டுச்சேரி, பெரம்பலூர். 

குண்டும், குழியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி டவுன் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதில் குறிப்பாக பள்ளிவாசல் -அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை மற்றும், பிரிவு, இணைப்பு சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆலங்குடி, புதுக்கோட்டை. 

பாதாள சாக்கடையில் அடைப்பு 
கரூர் மாவட்டம், கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏராளமான கடைகள், வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் பாதாள சாக்கடை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக கழிவுநீர் செல்ல வழியின்றி பாதாள சாக்கடை மூடி வழியாக  கழிவுநீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடைக்குள் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரூர்.

பொதுக்கழிவறை அமைக்கப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சியில், வடக்கு செல்லியம்மன் கோவில் செல்லும் வழியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் செவன்டாங்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் இப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதும், பன்றிகள் இந்த குளத்தில் இறங்கி அசுத்தம் செய்வதுமாக உள்ளதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்திவிட்டு இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் பொது கழிவறை அமைத்துக் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செட்டிக்குளம் பெரம்பலூர்.

மேலும் செய்திகள்