மோட்டார் சைக்கிள்-ஜீப் மோதல் ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலி
கீரனூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.;
கீரனூர்:
ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர்
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் சக்கரை (வயது 45). வேலம்பட்டி ஊராட்சியில் குடிநீர்தொட்டி ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு சக்கரை, தனது உறவினரான பெரிய வேலம்பட்டியை சேர்ந்த சண்முகவேல் மனைவி ஜோதிமணி (38) என்பவருடன் சொந்த வேலை காரணமாக வேலம்பட்டியில் இருந்து தொப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இந்தநிலையில் தொப்பம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சக்கரை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜோதிமணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கீரனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சாவு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த ஜோதி மணியை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பலியான சக்கரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜோதிமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் குடிநீர் ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.