திண்டுக்கல் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார்.

Update: 2022-04-11 16:10 GMT
திண்டுக்கல்:

கோடை வெயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வெப்பம், வேர்வையால் மக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல், கொடைக்கானல் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. 
அதன்படி திண்டுக்கல்லில் கடந்த 9-ந்தேதி சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த மழையால் நகரின் முக்கிய சாலைகள் தண்ணீரில் மூழ்கின. மழையின்போது வீசிய பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. 
இதற்கிடையே நேற்று  பகலில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

கொட்டித்தீர்த்த மழை
இந்தநிலையில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. இரவு முழுவதும் நீடித்த இந்த மழை இன்று காலை 8 மணி வரை பெய்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழையால் நாகல்நகர், பஸ்நிலைய பகுதிகள், திருச்சி சாலை, பழனி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதேபோல் பழனி, நிலக்கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது. 
காலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்தனர். ஆனால் விடுமுறை விடப்படாததால் மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்றனர்.
மூதாட்டி பலி
தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது, வீட்டின் சுவர் இடிந்து விழுவது போன்ற சேதங்கள் ஏற்பட்டன. அந்த வகையில் வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி ஊராட்சி கோட்டைமந்தை பகுதியை சேர்ந்த முனியம்மாள் (வயது 70) என்பவரின் வீட்டின் மேற்கூரை இன்று காலை 6.30 மணி அளவில் இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முனியம்மாள் இடிந்துவிழுந்த மேற்கூரை சுவரின் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்