சிறுத்தையுடன் சண்டையிட்டு எஜமானரை காப்பாற்றிய நாய்
சிவமொக்காவில், சிறுத்தையுடன் சண்டையிட்டு தனது எஜமானரை வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவமொக்கா:
விவசாயி
சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஆனவட்டி அருகே என்னேகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் பங்காரப்பா. விவசாயியான இவர் அங்குள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் சில நாய்களையும் வளர்த்து வருகிறார். அந்த நாய்கள் தினமும் இரவு நேரத்தில் வீடு மற்றும் பண்ணை தோட்டங்களை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தன.
அதேபோல் நேற்று முன்தினம் இரவும் பங்காரப்பாவின் நாய்கள் வீடு மற்றும் தோட்டங்களை காவல் காத்துக் கொண்டிருந்தன. நேற்று அதிகாலையில் பங்காரப்பா விழித்தெழுந்து, வீட்டின் அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்றார். அங்கு விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.
சிறுத்தையுடன், நாய் மோதல்
அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை, பங்காரப்பா மீது பாய்ந்து அவரை தாக்கியது. மேலும் கடித்து குதறிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அவரது வளர்ப்பு நாய் ஒன்று, ஓடி வந்து சிறுத்தையுடன் சண்டையிட்டது. இதனால் சிறுத்தைக்கும், வளர்ப்பு நாய்க்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. சிறுத்தையுடன் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டிய நாய், பின்னர் சிறுத்தையை அங்கிருந்து விரட்டியது.
இதையடுத்து அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதற்கிடையே இந்த அலறல் சத்தத்தைக் கேட்ட பங்காரப்பாவின் குடும்பத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த பங்காரப்பா தற்போது சிகிச்சைக்காக சிகாரிப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை தாக்கியதில் அவரது வளர்ப்பு நாயும் காயம் அடைந்திருந்தது.
அந்த நாயும் சிகிச்சைக்காக கால்நடை ஆஸ்பத்திரியில் விடப்பட்டுள்ளது. சிறுத்தையுடன் சண்டையிட்டு எஜமானரை வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.