சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
செண்பகராயநல்லூர்-மருதூர் சாலையில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேதாரண்யம்:
செண்பகராயநல்லூர் - மருதூர் சாலையில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அகல ரெயில்பாதை
வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் செண்பகராயநல்லூர் மருதூர் இணைப்பு சாலையில்தண்டவாளம் அமைத்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே சுரங்கப்பாதை அமைக்க கோரி அந்த பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் ரெயில்வே துறை தலைமை நிர்வாக அதிகாரி வர்மா, தலைமை பொறியாளர் காட்டே மற்றும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்வே துறை அதிகாரிகள் நேற்று வேதாரண்யத்திற்கு வந்து செண்பகராயநல்லூர் - மருதூர் சாலையில் அகல ரெயில்பாதை பணி நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது அங்கு சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.