திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
பெண் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். அப்போது ஒரு பெண், சிறுவனுடன் மனு கொடுக்க வந்தார். பின்னர் திடீரென அந்த பெண் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் பொன்னகரம் ராஜலட்சுமிநகரை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டசின் மனைவி சத்தியவாணி (வயது 29) மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் அவருடைய மகன் என்பது தெரியவந்தது. மேலும் அவருடைய நிலத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும், அதுபற்றி மனு கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி
அதேபோல் மனு கொடுக்க வந்த மற்றொரு நபர் திடீரென தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர் நத்தம் தாலுகா கணவாய்பட்டியை சேர்ந்த தொழிலாளி செல்வக்குமார் (37) என்பதும், குடிநீர் முறையாக வினியோகம் செய்யாததால் அவர் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.