குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
உம்பளச்சேரி-கரியாப்பட்டினம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வாய்மேடு:
உம்பளச்சேரி-கரியாப்பட்டினம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் இருந்து கரியாப்பட்டினம் வரை செல்லும் சாலை உள்ளது. உம்பளச்சேரி, துளசாபுரம், வாட்டாகுடி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேதாரண்யம், கரியாப்பட்டினம் செல்ல பொதுமக்கள் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றனர்.
வேதாரண்யத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், அரசு கல்லூரி உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும். தினந்தோறும் இந்த சாலை வழியாக 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சீரமைக்க வேண்டும்
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.