சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பழனி:
பழனி நகராட்சியின் முதல் கூட்டம், இன்றுஅலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கந்தசாமி, ஆணையர் கமலா, பொறியாளர் வெற்றிசெல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியின் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக குடிநீர் மஞ்சள் நிறமாக வருவதால் உரிய முறையில் சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழனி கோவில் நிர்வாகம் பட்டா மாறுதல் செய்துள்ள கிரிவீதியை மீட்க வேண்டும், குப்பைகளை தேங்க விடாமல் அப்புறப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி பேசுகையில், உரிய முறையில் தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படும் என்றும், அனைத்து வார்டுகளுக்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பழனி கிரிவீதியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பின்னர் சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கருப்பு பேட்ஜ், ரிப்பன் அணிந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது கூட்டத்தில் கோஷமிடக்கூடாது என நகராட்சி தலைவர் கூறினார். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகம் முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.