பெங்களூருவில் கடந்த 5 ஆண்டுகளில் 2,847 கட்டிட தீவிபத்து பதிவு

பெங்களூருவில் கடந்த 5 ஆண்டுகளில் 2,847 கட்டிட தீ விபத்துகள் பதிவாகி உள்ளது.;

Update: 2022-04-11 15:30 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் 55 சதவீதம்

  கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை மாநிலத்தில் நடக்கும் தீ விபத்துகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த மாதம்(மார்ச்) 10-ந் தேதி வரை 5 ஆண்டுகளில் 5,144 கட்டிட தீ விபத்துகள் பதிவாகி உள்ளன. பதிவான தீ விபத்துகளில் 55 சதவீதம் பெங்களூருவில் பதிவானவை ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் 2,847 கட்டிட தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான கட்டிட தீ விபத்துகள் மின்கசிவு காரணமாக தான் நடந்துள்ளது.

சிகரெட் மூலமாக...

  அதிகபட்சமாக பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் 858 கட்டிட தீ விபத்துகள் நடந்துள்ளது. மேற்கு மண்டலத்தில் 720 கட்டிட தீ விபத்துகளும், வடக்கு மண்டலத்தில் 503 கட்டிட தீ விபத்துகளும், தெற்கு மண்டலத்தில் 766 கட்டிட தீ விபத்துகளும் பதிவாகி உள்ளது.

  மேலும் கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் 1,889 கட்டிட தீ விபத்துகள் மின்கசிவு மூலமும், 785 தீவிபத்துகள் கியாஸ் கசிவு மூலமும், 41 தீவிபத்துகள் ரசாயனம் மூலமாகவும், 50 தீவிபத்துகள் எண்ணெய் கசிவு மூலமாகவும், 82 தீவிபத்துகள் சிகரெட் மூலமாகவும் ஏற்பட்டு உள்ளது.
  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை

  இதுகுறித்து தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், பெங்களூருவில் தினமும் ஏதாவது ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது. ஒரு நாளைக்கு 7 முதல் 10 கட்டிட தீ விபத்துகளை நாங்கள் கையாண்ட சம்பவமும் நடந்துள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் பெங்களூருவில் தான் அதிக கட்டிட தீவிபத்துகள் ஏற்படுகிறது.

  எங்களிடம் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஊர்க்காவல் படை வீரர்களையும் எங்களுடன் இணைத்து கொண்டுள்ளோம். அவர்கள் மாவட்டங்களில் தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றார்.

மேலும் செய்திகள்