முஸ்லிம் மாணவி குறித்து விசாரணை நடத்த வேண்டும்; பசவராஜ் பொம்மைக்கு, அனந்தகுமார் ஹெக்டே எம்.பி. கடிதம்
ஹிஜாப் விவகாரத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பால் பாராட்டப்பட்ட மாணவி முஸ்கான் கான் குறித்து விசாரணை நடத்த கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு அனந்தகுமார் ஹெக்டே எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு:
விசாரணை நடத்த வேண்டும்
உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில், மண்டியாவில் கல்லூரி மாணவி முஸ்கான் கானை மாணவர்கள் சுற்றி வளைத்து ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனர். பதிலுக்கு அவர் ‘அல்லாகூ அக்பர்’ என முழக்கமிட்டார். ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு, ஹிஜாப் அணிய விதித்த தடை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறியது.
அவரை பாராட்டி இந்திய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பலர் பரிசு வழங்கினர். இந்த நிலையில் அல்கொய்தா தலைவர் அயுமன் அல்ல ஜவாஹிரி பேசியதாக ஒரு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் ‘அல்லாகூ அக்பர்’ என முழக்கமிட்ட மாணவி முஸ்கான் கானை பாராட்டி இருந்தார். பயங்கரவாத தலைவர் மாணவியை பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த மாணவியை பயங்கரவாத அமைப்பு பாராட்டியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு அனந்தகுமார் ஹெக்டே எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அடையாளம் தெரியாத சக்திகள்
‘அல்லாகூ அக்பர்’ என்று கோஷமிட்ட மாணவி முஸ்கான் கான் உலக அளவில் பேசப்பட்டுள்ளார். அவரை பாராட்டி பரிசுகள் வழங்கியுள்ளனர். தற்போது தடை செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கவரவாத அமைப்பின் தலைவர் அந்த மாணவியை பாராட்டியுள்ளார். கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும், முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சில அடையாளம் தெரியாத சக்திகள் இருப்பதாக ஐகோர்ட்டு தீா்ப்பிலும் கூறப்பட்டுள்ளது.
அதனால் முழக்கமிட்ட மாணவிக்கும், அந்த அடையாளம் தெரியாத சக்திகளின் தொடர்பு மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு உள்ள தொடர்பு குறித்து விரிவான முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
பசவராஜ் பொம்மை
இந்த கடிதம் குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பசவராஜ் பொம்மை, ‘கோஷமிட்ட மாணவி முஸ்கான் கான் குறித்து விசாரணை நடத்துமாறு அனந்தகுமார் ஹெக்டே எம்.பி. எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதுகுறித்து அனந்தகுமார் ஹெக்டேவிடம் பேசுவேன். விவரங்களை வழங்குமாறு கேட்பேன். அவர் என்ன விவரங்களை கொடுக்கிறார் என்பதை பார்க்கலாம்.
அவரிடம் என்ன விவரங்கள் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அவர் வழங்கும் தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடத்துவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்’ என்றார்.