பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகத்திற்கு ரூ.335 கோடி வருவாய் இழப்பு

2021-2022-ம் நிதி ஆண்டில் பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகத்திற்கு ரூ.335 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

Update: 2022-04-11 15:11 GMT
பெங்களூரு:

மெட்ரோ ரெயில்

  பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரையும், எலச்சனஹள்ளி முதல் நாகசந்திரா வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வேறு சில பாதைகளிலும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

  போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாங்கள் செல்லும் இடங்களுக்கு காலதாமதமாக சென்ற மக்களுக்கு மெட்ரோ ரெயில் பெரிய வரப்பிரசாதமாக அமைந்து இருந்தது. மெட்ரோ ரெயில்களை தினமும் 2 லட்சம் பேர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தாலும், அவற்றை இயக்கும் பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.335 கோடி நஷ்டம்

  2021-2022-ம் நிதி ஆண்டில் மட்டும் பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகத்திற்கு ரூ.335 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.341 கோடியும், 2016-2017-ம் நிதி ஆண்டில் ரூ.457 கோடியும், 2017-2018-ம் நிதி ஆண்டில் ரூ.352 கோடியும், 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.498 கோடியும், 2020-2021-ம் நிதி ஆண்டில் ரூ.320 கோடியும் மெட்ரோ ரெயில் கழகத்திற்கு இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.

  2020-2021-ம் நிதி ஆண்டில் கொரோனா காரணமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த நிதி ஆண்டில் இழப்பீடு ஏற்பட்டு உள்ளது. ஆனால் மற்ற நிதி ஆண்டுகளில் எப்படி இழப்பீடு என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது மெட்ரோ ரெயில் கழகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் மெட்ரோ ரெயில் கழகம் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்