கோவில் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
கோவில் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
எட்டீஸ்வரர் கோவில்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள சிவனடியார் திருக்கூடம் அறக்கட்டளை சார்பில் 2 ஏக்கரில் எட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியான சிவனடியார் மூர்த்தி (வயது 60) என்பவர் இந்த கோவிலை பராமரித்து தினமும் பூஜைகள் செய்து வந்தார்.
இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த அந்த கோவிலுக்கு அருகில் குடியிருக்கும் அ.தி.மு.க. பிரமுகர் வெங்கடேசன (65) என்பவர் கோவிலுக்கான 40 சென்ட் நிலத்தை மடக்கி சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்த ஒரு பக்தர் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்தும் ஆக்கிரமித்த அ.தி.மு.க. பிரமுகர் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் கண்டித்து பதிவு வெளியிட்டிருந்தார்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இது வைரலாக பரவியதால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. பிரமுகர் வெங்கடேசன் தன்னை பற்றி முக நூலில் பதிவு வெளியானதற்கு காரணம் கோவில் நிர்வாகி மூர்த்தியின் தூண்டுதல் தான் என்று கோபமடைந்து தனது மகன்கள், உறவினர்களுடன் வந்து கோவிலில் இருந்த மூர்த்தியை தரக்குறைவாக பேசி தடி, கம்பு ஆயுதங்களுடன் அவருடன் வந்த அனைவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த கோவில் நிர்வாகியான சிவனடியார் மூர்த்தி ரத்தக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் கோவில் நிர்வாகி மூர்த்தியை கொலை வெறியுடன் தாக்கிய வீடியோ காட்சியுடன் அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி உலக சிவனடியார் திருக்கூடம் அமைப்பின் சிவனடியார்கள் கூட்டமாக மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
போலீஸ் விசாரணை
அப்போது சிவமந்திரங்கள் வாசித்து கோவில்நிலத்தை ஆக்கிரமித்தவரை கைது செய்யக்கோரி புகார் அளித்தனர். இதையடுத்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.