சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணம் இல்லாத வெள்ளி பொருட்கள் பறிமுதல்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணம் இல்லாததால் ரூ.13½ லட்சம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்து அபாரதத் தொகை விதிக்கப்பட்டது.
சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நடைமேடை 8-ல் வந்து நின்றது. இதையடுத்து, ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில் சந்தேகிக்கும் படியாக இருந்த நபர் ஒருவரின் பையை சோதனையிட்டபோது, அதில் வெள்ளி பிஸ்கட் உள்பட 18.9 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பொருட்களுக்குரிய உரிய ஆவணம் இல்லாததால், அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் அய்யப்பா (வயது 40) என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.13½ லட்சம் என்பதால், அதற்குரிய அபாரதத் தொகையாக ரூ.81 ஆயிரம் விதிக்கப்பட்டு, அந்த தொகையை செலுத்திய பின்னர் அவரிடம் வெள்ளி பொருட்களை போலீசார் ஒப்படைத்தனர்.