மாட்டிறைச்சி கூடத்தை இந்து அமைப்பினர் முற்றுகை
மாட்டிறைச்சி கூடத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.;
திருச்சி:
மாட்டிறைச்சி கூடம் முற்றுகை
திருச்சி பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் மாட்டிறைச்சி கூடம் உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் மாடுகள் டாக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதி அளித்தபிறகு வெட்டப்பட வேண்டும். மேலும், மாட்டிறைச்சி கூடத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
இந்நிலையில் நேற்று மாலை சரக்கு ஆட்டோவில் இரண்டு மாடுகளை அடைத்து வைத்து மாட்டிறைச்சி கூடத்துக்கு கொண்டு சென்றனர். இதைக்கண்ட அகில இந்திய இந்துமகா சபா மாவட்ட தலைவர் மணிகண்டன் அங்கு சென்று ஊழியர்களிடம் டாக்டர் பரிசோதிக்காமல் இரண்டு மாடுகளையும் வெட்டுவதற்கு கூடத்துக்குள் அனுமதித்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கும், மற்ற இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு முற்றுகையிட்டனர்.
போலீசில் புகார்
மாட்டிறைச்சி கூடத்துக்குள் சென்று பார்த்தபோது, அங்கு ஏராளமான கன்றுக்குட்டிகளும், பசுமாடுகளும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டிறைச்சிக்கூடம் விதிமுறை மீறி செயல்படுவதாகவும், டாக்டர் அனுமதி அளிக்காமல் மாடுகள் வெட்டப்படுவதாகவும், கன்றுக்குட்டிகளை கூட வெட்டுவதாகவும் கூறினார்கள்.
இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு, உதவி கமிஷனர் அஜய் தங்கம் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி கூறினர். இதையடுத்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று மாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.