சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சமயபுரம்:
மாரியம்மன் கோவில்
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதிநிலவும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
கொடியேற்றம்
அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து துணியால் வரையப்பட்ட அம்மன் கொடியினை அம்மன் பாதத்தில் வைத்து கோவில் குருக்கள் எடுத்து வந்தார். அதைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் மேள தாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து 7.55 மணிக்கு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு தீப ஆராதனை நடைபெற்றது இதில், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். பின்னர் இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதே போன்று, விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருவார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
தேரோட்டம்
வருகிற 18-ந்தேதி அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வருகிற 20-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 21-ந் தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 26-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.