முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் விஷயங்களில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க தயங்கவில்லை; டி.கே.சிவக்குமார் பேட்டி

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் விஷயங்களில் நிலைப்பாட்டை தெரிவிக்க தயங்கவில்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2022-04-10 22:02 GMT
பெங்களூரு:

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முற்றிலும் வேறுபட்டது

  மாநில அரசின் தோல்விகளை மூடி மறைக்க பா.ஜனதா தினமும் ஒரு மத பிரச்சினையை எழுப்புகிறது. மக்களிடம் எடுத்து கூறும் அளவில் அரசு எதையும் சாதிக்கவில்லை. ஹிஜாப், ஹலால் இறைச்சி, முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை, மசூதிகளில் ஒலிப்பெருக்கிக்கு தடை என்று மதம் தொடர்பான விஷயங்களை சில இந்து அமைப்புகள் எழுப்புகின்றன. அதற்கு ஆளும் பா.ஜனதா ஆதரவு அளிக்கிறது.

  இதன் மூலம் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜனதா முயற்சி செய்கிறது. உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தின் சமூக-பொருளாதார நிலை முற்றிலும் வேறுபட்டது. காங்கிரஸ் மக்களை ஒன்றுபடுத்துகிறது. பா.ஜனதா மக்களை பிளவுப்படுத்துகிறது.

காங்கிரஸ் தயங்கவில்லை

  பொதுமக்கள் கூட்டங்கள் நடத்தி பா.ஜனதா அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்து சொல்வோம். விலைவாசி உயர்வை கண்டித்து 11-ந் தேதி (இன்று) சுதந்திர பூங்காவில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் விஷயங்களில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறது. இதில் காங்கிரஸ் தயங்கவில்லை.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்