தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு
தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்தவர்கள் கடந்த மாதம் சாம்பல் புதன் தொடங்கி 40 நாட்களை தவக்காலமாக விரதம் இருந்து அனுசரித்து வருகிறார்கள். இந்த தவக்காலத்தின் உச்சகட்டமாகவும், புனித வாரத்தின் தொடக்கமாகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.ஏசு பாடுபட்டு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் நிகழ்ந்த ஏசுவின் எருசலேம் பயணத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தேவாலயம் சென்று வழிபாடு நடத்துவார்கள். புனிதம் செய்த குருத்தோலையை வீடுகளுக்கு கொண்டு சென்று வைத்து வழிபாடுவார்கள்.
தஞ்சை திரு இருதய பேராலயம்
தஞ்சை திரு இருதய பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் குருத்து ஞாயிறு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பேராலய பங்கு தந்தை பிரபாகரன் அடிகளார், உதவி பங்கு தந்தை அலெக்சாண்டர், திருத்தொண்டர் பிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வியாகுலமாதா ஆலய வளாகத்தில் இருந்து குருத்தோலை பவனி திரு இருதய பேராலயம் நோக்கி வந்தது. இதில் இறைமக்கள் புனிதம் செய்யப்பட்ட குருத்தோலையை கையில் ஏந்தியவாறு செபித்துக்கொண்டும், பாடிக்கொண்டும் வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சென்ட் தலைமையில் பங்கு பேரவையினர், இளைஞர் மன்றத்தில் செய்திருந்தனர்.
கோட்டை கிறிஸ்து நாதர் ஆலயம்
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது. ஆயர் பிரைட்பிராங்க்ளின் தலைமையில் நடந்த வழிபாட்டில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.இதையடுத்து ஆலயத்தில் இருந்து குருத்தோலையை திருச்சபை மக்கள் கையில் ஏந்தியவாறு பவனியாக பாடல்களை பாடிக்கொண்டு சோழன்சிலை வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து குருத்தலைஞாயிறு இறைசெய்தியை ஆயர் பிரைட்பிராங்க்ளின் அளித்தார். முடிவில் நற்கருணை ஆராதனையுடன் வழிபாடு முடிவடைந்தது.
கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
இதே போல் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், குழந்தை ஏசு ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பூண்டி மாதா ஆலயம்
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. பவனியை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி தொடங்கி வைத்து குருத்ேதாலைகளை ஏந்தி வந்தார்.இதில் துணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம், உதவி பங்குத்தந்தையர்கள் ஜான்சன், இனிகோ ஆகியோர் கலந்து கொண்டனர். பூதலூர் மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அடைக்கலராஜ் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.