வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
டேனிஸ்பேட்டை அருகே லோக்கூர் வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்:-
டேனிஸ்பேட்டை அருகே லோக்கூர் வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
துப்பாக்கிகளுடன் சுற்றினர்
சேலம் வன பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் குமார் தலைமையில் டேனிஸ்பேட்டை வனச்சரகர்் செந்தில்குமார், வனவர்கள் கிருஷ்ணமூர்த்தி பன்னீர்செல்வம், வனக்காப்பாளர்கள் கோபி, அருணகிரி ஆகியோர் காரியாப்பட்டி பிரிவு லோக்கூர் வடக்கு காப்பு காட்டில் மேல் காடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் சுற்றித்திரிந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் வனப்பகுதியினர் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்ததும் அதற்கு உரிய உரிமம் இல்லாததும் தெரியவந்தது.
3 பேர் கைது
மேலும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வே.கொங்காரப்பட்டி மேல்காடு பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 60), வால்காடு பகுதியை சேர்ந்த நவநீதன் (36), முருகன் (52) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை வனத்துறையினர் தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் வெடி மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக புஷ்பராஜ், நவநீதன், முருகன் ஆகிய 3 பேர் மீதும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்ததுடன் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.