வாராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வாராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மண்டல பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
வாராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மண்டல பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஓய்வூதியர் சங்க கூட்டம்
தஞ்சையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முதன்மை கிளை வளாகத்தில், தஞ்சை மண்டல பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் எம்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
இணைச்செயலாளர் சரவணமுத்து, முன்னாள் பொதுச்செயலாளர் சிங்காரவேலு, பகுதி செயலாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ கலந்து கொண்டு பேசினார்.
ரூ.5.46 லட்சம் கோடி தள்ளுபடி
பின்னர் தாமஸ்பிராங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வாராக்கடனாக ரூ.5.46 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. வாராக்கடன் தள்ளுபடி பெரிய பணக்காரர்கள் மட்டும் தான் செய்யப்படுகிறது. சிறு, குறு வியாபாரிகளுக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே பெரும் பணக்காரர்களிடம் வாராக்கடனை தள்ளுபடி செய்யாமல் அதனை வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வாராக்கடனை வசூலிப்பதில் மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மயமாக்கக்கூடாது
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கினால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அவர்களுக்கு கல்விகடன், விவசாய கடன் உள்ளிட்ட எந்த ஒரு கடனும் வங்கியில் இருந்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் அவர்கள் கந்துவட்டிகாரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடிய ஒரு அபாய சூழ்நிலை உருவாகும். எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது.
அதே நேரத்தில் பல ஆண்டுகளாக வங்கி பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. அதாவது 36 ஆண்டுகளாக இதே நிலைமை தான் உள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 1 லட்சம் ஓய்வூதியர்கள் இறந்து உள்ளனர். மத்திய அரசில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் போது ஓய்வூதியமும் அதிகப்படுத்தப்படுகிறது. ஆனால் வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. எனவே, வங்கி ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியம் உயர்த்த வேண்டும்.
விரைவில் போராட்டம்
வங்கி ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி 100 சதவீதம் வழங்க வேண்டும். அதேபோன்று ஓய்வூதியர்களின் மருத்துவ செலவில் ஒரு பகுதியாவது வங்கிகள் ஏற்று கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைத்து எம்.பி.க்களும் மனு அளித்து கொண்டிருக்கிறோம். எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் வங்கி ஊழியர் சங்கம், அதிகாரிகள் சங்கத்துடன் கலந்தாலோசித்து இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.