இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதல்; பள்ளி ஆசிரியை பலி

திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியை பலியானார். மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-04-11 01:31 IST
திருப்பரங்குன்றம்,
 
திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியை பலியானார். மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

டெட் தேர்வு பயிற்சி

திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை ஜோன்ஸ்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரெட்ரிக் சாமுவேல். இவருடைய மனைவி நான்சி லெனிட்டா ராணி (வயது 34). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பிரெட்ரிக் சாமுவேல் நேற்று காலையில் பசுமலையில் உள்ள தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை டெட் தேர்வு பயிற்சிக்கு கருமாத்தூரில் உள்ள ஒரு கல்லூரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
திருமங்கலம்-சமயநல்லூர் நான்குவழிச்சாலையில் தோப்பூர் 100 அடி கொடிமரம் அருகே ரோட்டை கடக்க முயன்றதாக தெரிகிறது. இந்த நிலையில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் வந்த வேகத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மோதிய வேகத்தில் ரோட்டை விட்டு நிலைகுலைந்து பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

ஆசிரியை பலி

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நான்சி லெனிட்டா ராணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். அவரது கணவர் காயமடைந்தார். இதற்கிடையே காரில் பயணம் செய்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாலாஜி (30), கார்த்திகா (30) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து காயமுற்ற 3 பேரையும் மீட்டு மதுரைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இறந்த ஆசிரியையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்