ரேஷன் கடை ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அரியலூர்
தமிழக அரசின் உத்தரவின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் அரியலூர் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற 263 முழு நேர ரேஷன் கடைகள், 184 பகுதி நேர ரேஷன் கடைகள் ஆகியவற்றில் பணிபுரிகின்ற 210 விற்பனையாளர்கள், 12 இதர பணியாளர்களுக்கும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை, இதய நோய் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேவைப்படும் நபர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மேல் சிகிச்கைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. முகாமில் தினமும் 25 ஊழியர்கள் வீதம் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இம்மருத்துவ முகாமினை கூட்டுறவுத்துறை ஊழியர்கள் உரிய முறையில் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும், என்றார். இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் முத்துகிருஷ்ணன், துணைப்பதிவாளர்கள் ஜெயராமன், அறப்பள்ளி, கூட்டுறவு சார்ப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்