மாவட்டத்தில் 3-வது நாளாக பலத்த மழை
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் பகுதியில் பெய்த மழையினால் அரசு மகப்பேறு மருத்துவமனை, டி.பி. மில்ஸ் சாலை, அம்பல புளி பஜார், சுப்பிரமணியன் கோவில் தெரு ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சேதமடைந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் சென்றது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
வத்திராயிருப்பு
அத்திகோவில் ஆற்றுப்பகுதி, தாணிப்பாறை ஆற்றுப் பகுதி உள்ளிட்ட நீர் வரத்து பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்தது. வத்திராயிருப்பு பகுதியில் தற்போது கோடை கால நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை இந்த பயிர்களுக்கு நல்லது எனவும், சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
அகழாய்வு பணி
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று தினங்களாக தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக அகழாய்வு பணி நடைபெறவில்லை.
குழி சேதம் அடையாமல் இருக்க அதிகாரிகள் தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர். இதனால் அகழாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி, ஆத்திபட்டி, புளியம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
கன மழை காரணமாக பல இடங்களில் கழிவுநீர் வாருகால்களில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் மழை நீரோடு கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இவ்வாறு விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக பெய்து வரும் பலத்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மழை அளவு
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- அருப்புக்கோட்டை 7, ஸ்ரீவில்லிபுத்தூர் 40.6, சிவகாசி 11, விருதுநகர் 42.8, ராஜபாளையம் 38, வத்திராயிருப்பு 120, வெம்பக்கோட்டை 15, கோவிலாங்குளம் 40.8. மாவட்டத்தில் பெய்த மொத்தமழை அளவு 366.2, சராசரி மழையளவு 30.52.