பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு
கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.;
கரூர்,
கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில் தற்போது கோடைகாலம் என்பதால், கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தினமும் ஆய்வு செய்து குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்து வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வழங்க பயன்படுத்த கூடிய குழாய்கள், மோட்டார்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா?, தண்ணீர் வழங்குவதில் நடைமுறை சிரமங்கள் ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள பகுதிகளில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது. அவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும். நீர்த்தேக்க தொட்டியின் கொள்ளளவில் எத்தனை முறை நீரேற்றினால் அனைவருக்கும் சமமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய இயலும். எத்தனை முறை குடிநீர் ஏற்றப்படுகிறது உள்ளிட்ட ஒவ்வொரு தகவல்களும் தினமும் ஆய்வு செய்யப்பட்டு, வாரந்தோறும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். கோடைகாலம் என்பதால், பொதுமக்களுக்கு எந்த வகையிலும் சிரமம் ஏற்படாத வகையில் குடிநீரை சீரான இடைவெளியில் முறையாக வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.