ராமநவமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

ராமநவமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-04-10 19:09 GMT
கரூர், 
ராமநவமி
ராமநவமியையொட்டி கரூர் ஷீரடி சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணியளவில் கணபதி ஹோமம், விஷ்வக்சேனர் ஆராதனை, தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், பாபா ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சாய்பாபாவிற்கு காவிரி தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், பாபா அஷ்டோத்திர அர்ச்சனையும் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மாலை 6 மணியளவில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமருக்கு சிறப்பு பூஜை
வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள வல்லபை கணபதி கோவிலில் உள்ள ராமருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பலவித மலர் மற்றும் துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் ராமரை திருத்தேரில் அமர வைத்து பக்தி கோஷங்களை எழுப்பிய படி பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சேங்கல் வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஆத்மநேய ஆஞ்சநேயர்
கரூர் வெண்ணை மலையில் அமைந்துள்ள ஆத்மநேய ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காகவும், நோய் நொடியின்றி வாழ வேண்டியும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்