லாரி சக்கரத்தில் சிக்கி கல்குவாரி மேற்பார்வையாளர் பலி
தோகைமலை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்குவாரி மேற்பார்வையாளர் பலியானார்.
தோகைமலை,
கல்குவாரி
தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி கன்னிமார்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் பாகாநத்தம் தனியார் கல்குவாரியில் மேற்பார்வையாள ராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பாளையம்-தோகைமலை மெயின் ரோட்டில் வேம்பத்திராம்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது தரகம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முருகன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
உடல் நசுங்கி பலி
இதில், தூக்கி வீசப்பட்ட முருகன் சாலையில் விழுந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் ஜல்லிக்கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக முருகன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் முருகன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக லட்சுமணன், சதீஷ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.